நடப்பு நிதியாண்டான, 2017 - 2018ல், புதிதாக, 1.25 கோடி பேரை, வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வர, வருமான வரித்துறை திட்டமிட்டுஉள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளாக, வருமான வரி செலுத்தாத வரி ஏய்ப்பாளர்களை கண்டறியும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
கறுப்புப் பண ஒழிப்பிற்காக, மத்திய அரசு, 2016, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டது. அதை தொடர்ந்து, வங்கிகளில், ஏராளமானோர் பணம் செலுத்தினர்.நீண்ட காலமாக பரிவர்த்தனை இல்லாமல் இருந்த கணக்குகளில் கூட, பணபரிவர்த்தனை அதிகரித்தது.


இதுகுறித்து, வரித்துறை ஆய்வு செய்தபோது, வரி செலுத்தாத பலர், லட்சக்கணக்கான ரூபாய் 
பணத்தை, பரிமாற்றம் செய்தது தெரிந்தது. இதன் அடிப்படையில், வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல ஆண்டுகள் வருமான வரி செலுத்தாமல் இருந்த பலருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பபட்டது;மேலும், வருமான வரித்துறை, தொடர்ந்து எச்சரிக்கைகளையும் வெளியிட்டு வந்தது. வருமான வரித்துறையின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இதன் மூலம், நடப்பு நிதியாண்டான, 2017 - 2018ல், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் மொத்த வருமான வரி வசூல், 1.42 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, 2016 -- 17 நிதியாண்டுக்கான முதல் காலாண்டை விட, 14.5 சதவீதம் அதிகம்.இதே நிலை நீடித்தால், நடப்பு நிதியாண்டில், புதிதாக, 1.25 கோடி பேரை, வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வர முடியும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் நம்பிக்கைதெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நாடுமுழுவதும் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை, அதிகரிக்க,முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
வருமான வரி செலுத்தாமல், ஏய்ப்பாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது. செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கி மூலம் நடந்த பண பரிமாற்றம் மூலம், தனி நபர்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் வருவாய் விபரங்கள் தெரிய வந்து உள்ளதால், அதனடிப்படையில் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம்.இதன் மூலம், நடப்பு நிதியாண்டில், புதிதாக, 1.25 கோடி பேரை, வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.