தென் இந்தியாவில் முதல் முறையாககிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் காளான் பாறைகள் கண்டுபிடிப்பு
தென்இந்தியாவில்
முதல்முறையாக கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களின் எல்லையில் காளான் பாறைகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்
கோவிந்தராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலகில் பல இடங்களில் காளான் பாறைகள் காணப்பட்டாலும், இந்தியாவில் தார்
பாலைவனங்களில் மட்டும் இப் பாறைகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு
வகை இயற்கை வடித்த சிற்பமாகும். இந்த பாறையானது காளான் போன்று தலை
விரிந்தும், கழுத்து சிறுத்தும் காணப்படும்.
பாறையின் மேல் பகுதி கடினமாகவும், கீழ் பகுதி மென்மையான தன்மைகளை
கொண்டு அமைந்திருத்தல், காற்று, நீர், மணல், ரசாயனம் ஏற்படுத்தும் தேய்வு
காரணங்களால் இந்த வடிவம் ஏற்படுவதாக மண்ணியலாளர்கள் கூறுவர். இந்த பாறைகளை
பீடப்பாறைகள் எனவும் அழைப்பர்.
அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில்
மலைப் பிரதேசத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த பாறைகள்
காணப்படுகின்றன. தைவான் புவியியல் பூங்காவில் அலைகளால் அரிக்கப்பட்ட
ராணியின் தலை என்ற பெயரால் அழைக்கப்படும் இப் பாறை மிக புகழ்வாய்ந்தது.
இப் பாறைகள் தென்இந்தியாவில் இதுவரை எங்கும் காணப்பட்டுள்ளதாக பதிவுகள்
இல்லை. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை அருகே வேலூர் மாவட்டம்,
திருப்பத்தூர் வட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தின் கதிரியப்பன்
கோயில் வட்டம் என்ற பகுதியில் இப் பாறைகள் முதல் முறையாக
கண்டறியப்பட்டுள்ளது.
தோக்கியம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற
ஆசிரியர் வெள்ளையப்பன் அளித்த தகவலின் பேரில் இப் பாறையை ஆய்வு செய்த போது
காளான் பாறைகளின் தனித்துவம் தெரியவந்தது. அருகருகே அமைந்துள்ள சுமார் 5
அடி உயரத்தில் 6 பாறைகளில் தரையிலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் ஒரே
மட்டத்தில் தேய்மானம் நிகழ்ந்து, இப் பாறை வடிவங்கள் உருவாகியுள்ளன. இதில் 2
பாறைகளின் தலைப்பகுதி அதிக தேய்மானத்தினால் உடைந்து கீழே விழுந்துள்ளன.
இந்த காளான் பாறைகள் குறித்து மேலாய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இதன்மூலம் தோக்கியம் கிராமம் இந்திய புவியியல் வரைபடத்தில் இடம்பெறும்.
இப் பாறைகள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விசித்திரமான
இயற்கை நிகழ்வின் அடையாளமாக உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments